தமிழ் புத்தாண்டு கட்டுரை

Tamil Puthandu Katturai In Tamil

இந்த பதிவில் தமிழர்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் “தமிழ் புத்தாண்டு கட்டுரை” பதிவை காணலாம்.

தமிழ் இனமானது ஒவ்வொரு வருடத்திலும் வரும் தமிழில் சித்திரை முதலாம் திகதியை வருடப்பிறப்பாக கொண்டாடும் நாளே தமிழ் புத்தாண்டு ஆகும்.

தமிழ் புத்தாண்டு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுவதற்கான காரணம்
  3. புத்தாண்டு கொண்டாட்டம்
  4. தமிழ்ப் புத்தாண்டின் முக்கியத்துவம்
  5. கலை கலாச்சார நிகழ்வுகள்
  6. முடிவுரை

முன்னுரை

தமிழ் இனமானது கல்தோன்றா மண்தோன்றா காலத்திலேயே தோன்றியது என பெருமைப்படுத்தப்படுகின்றது. இதனாலேயே தான் “கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிˮ என போற்றப்படுகின்றது.

இத்தகைய பெருமைக்குரிய தமிழ் இனமானது ஒவ்வொரு வருடத்திலும் வரும் தமிழில் சித்திரை முதலாம் திகதியை வருடப்பிறப்பாக கொண்டாடும் நாளே தமிழ் புத்தாண்டு ஆகும்.

உலக மக்கள் ஒவ்வொருவரும் தமது சமய சடங்குகள் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப பல்வேறுபட்ட பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

அவ்வகையில் தமிழ் புத்தாண்டினை இந்தியா⸴ இலங்கை⸴ மாலைதீவு⸴ மலேசியா⸴ சிங்கப்பூர் உள்ளிட்ட தமிழர் வாழும் நாடுகளில் உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இப்புத்தாண்டு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுவதற்கான காரணம்

தமிழ் புத்தாண்டு ஏன் சித்திரையில் கொண்டாடுகிறார்கள் என்ற கேள்வியானது நம்மில் பலருக்கு எழுந்திருக்கும். அதற்கான காரணத்தை இப்போது காண்போம்.

உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே. சூரியனை மையமாக வைத்து தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின.

பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் தமிழர்கள் 12 பாகங்களாகப் பிடித்தனர். இவ் வான வீதியை மேஷம்⸴ ரிஷபம்⸴ மிதுனம்⸴ கடகம்⸴ சிம்மம்⸴ கன்னி⸴ துலாம்⸴ விருச்சிகம்⸴ தனுசு⸴ மகரம்⸴ மீனம் எனப் 12 பாகங்களாக பிரித்தார்கள். இதுவே 12 ராசிகள் எனப்பட்டது.

சூரியன் மேசத்திற்கு நுழையும் நிகழ்வு சித்திரை மாதம் முதல் நாள் நிகழ்கின்றது. ஆகவே இந்த ஆரம்பத்தையே தமிழ் புத்தாண்டின் தொடக்க நாளாக நம் மூதாதையர்கள் முடிவு செய்தனர். அதனை அடிப்படையாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் ஆரம்பித்தார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ் புத்தாண்டானது தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய நாட்களில் இல்லங்களைச் சுத்தம் செய்வதிலும்⸴ அலங்கரிப்பதிலும் தமிழர்கள் ஆர்வம் செலுத்துவர்.

புத்தாண்டு அன்று அதிகாலையில் நீராடி புத்தாடை அணிந்து வாசலில் கோலமிட்டு கோயிலுக்கு சென்று வழிபடுவர். மாலை வேளைகளில் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று பலகாரம் பகிர்ந்துண்டு கொண்டாடுவர்.

இவை மட்டுமன்றி இந்நாளில் கைவிசேடம் பெறுவது இடம்பெறும். இப்புதிய நாளில் தொழில்களை மற்றும் சுப காரியங்களையும் ஆரம்பிப்பார்கள். பெற்றோர் பெரியோரின் ஆசி பெற்று கொண்டாடி மகிழ்வர்.

தமிழ்ப் புத்தாண்டின் முக்கியத்துவம்

புத்தாண்டு புது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியது. புத்தாண்டு என்பது புதிய தொடக்கத்தைக் குறிக்கும் நாளாகும்.

மகிழ்ச்சி⸴ கொண்டாட்டம்⸴ உறவினர்களின் ஒன்றுகூடல்⸴ சுபகாரியத் தொடக்கம் என பல மங்களகரமான நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது.

எனவே இத் தமிழ்ப் புத்தாண்டு சாதாரண ஒரு பண்டிகை அல்ல அது வாழ்க்கைக்குத் தேவையான பல விடயங்களை கூறுகின்றது.

கலை கலாச்சார நிகழ்வுகள்

தமிழ் புத்தாண்டு தினத்தன்று கலை கலாசார இசை நிகழ்ச்சிகளுடன் புதுவருடம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அந்தந்த இடத்துக்கு இடம் கலாச்சார மரபுக்கு ஏற்ப வைபவங்கள் நடைபெறும்.

பாரம்பரிய நிகழ்ச்சிகளான போர்த்தேங்காய் அடித்தல்⸴ சேவல் சண்டை⸴ கிளித்தட்டு⸴ சடுகுடு போன்ற விளையாட்டுகள் பொதுவாக நடைபெறும் சிறப்பு அம்சங்களாகும்.

கும்மியடித்தல்⸴ பல்லாங்குழி போன்ற பெண்கள் விளையாட்டுகளும் இடம்பெறுவதுண்டு. மாட்டுவண்டிச் சவாரி⸴ மரதன் ஓட்டம்⸴ வழுக்கு மரம் ஏறுதல்⸴ தலையணை சண்டை போன்றனவும் இடம் பெறுவதுண்டு.

முடிவுரை

சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று முற்காலத்தில் ராஜாக்கள் பயபக்தியுடன் கடவுளை வழிபட்டு பஞ்சாங்கப் பலனைக் கேட்டார்கள். அப்பலனின் அடிப்படையில் நாடு நலம் பெற என்னென்ன முன்னேற்றங்கள் செய்ய வேண்டுமென முடிவெடுப்பார்கள்.

இவ்வாறு பல சிறப்புக்களைக் கொண்ட புத்தாண்டு போல தமிழரின் பெருமையை மறவாமல் நாடும்⸴ வீடும் செழித்து வாழ்வில் வளம் பெறுவோமாக.

You May Also Like:
தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்
தமிழ் மொழியின் பெருமைகள் கட்டுரை