இந்த பதிவில் “நான் ஒரு பறவையானால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரை பதிவை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டுள்ளன.
நான் ஒரு பறவையானால் கட்டுரை – 1
நான் ஒரு பறவையானால் கவலைகள் இன்றி இந்த சுதந்திர வானில் சிறகடித்து பறப்பேன். எனக்கென்று மொழிகள் இல்லை, மதங்கள் இல்லை, போட்டிகளும் இல்லை, பகைமை இல்லை இந்த உலகின் அனைத்து அம்சங்களும் என்னுடைய நண்பர்கள் என்றே எண்ணுவேன்.
இந்த இயற்கையின் வனப்புகளான சலசலத்து ஓடும் நதிகள், மிக உயர்ந்த மலைகள், பச்சை கம்பளம் விரித்த காடுகள், பூத்து சொரிகின்ற மரங்கள், பரந்து விரிந்த வயல் வெளிகள், ஆர்ப்பரிக்கின்ற சமுத்திரங்கள் போன்றவற்றை எந்த தடைகளும் இன்றி பறந்து சென்று காண்பேன்.
எனக்கு மனிதர்களை போல கடவுசீட்டு தேவையில்லை இந்த அழகான உலகத்தின் எல்லா இடங்களுக்கும் என்னால் பறந்து செல்ல முடியும். இந்த சுதந்திரம் எனக்கு இறைவன் கொடுத்த வரமாகும்.
எனக்கு பிடித்த தானியங்களை பழங்களை இந்த இயற்கையில் இருந்தே விரும்பியவாறு உண்பேன். என்னிடத்தில் வாழ்க்கை தொடர்பான எந்த கவலைகளும் இருக்காது. மகிழ்ச்சியாக பாடிக்கொண்டே இந்த வானில் பறப்பேன்.
ஒற்றுமையாக என் சகபாடிகளோடு நான் வாழ்வேன் எந்த காரணத்திற்காகவும் யாருடைய துன்பத்துக்கும் நான் காரணமாக மாட்டேன். எம் தாய் போன்ற இயற்கையை நான் ஆழமாக நேசிப்பேன்.
சோர்வின்றி உற்சாகமாக நான் பறந்து கொண்டே இருப்பேன். இந்த அழகான மரங்களின் கிளைகளில் ஆனந்தமாய் ஓய்வெடுப்பேன். எனக்கு கிடைத்த இந்த அழகிய வாழ்வை நான் அனுதினமும் கொண்டாடி தீர்ப்பேன்.
இயற்கையை இரசிப்பதும் அதனோடு வாழ்வதும் எனக்கு கிடைத்த பெரிய வரமாக கருதுவேன் இந்த உலகில் யாரும் நினைத்து பார்க்க முடியாத வாழ்வை நான் வாழ்வேன்.
நான் ஒரு பறவையானால் கட்டுரை – 2
இந்த உலகில் பிறந்து வாழ்கின்ற மனிதர்களுக்கு இந்த பரந்த வானில் கவலைகள் மறந்து பறக்க வேண்டும் என்பதனை தவிர பெரிய ஆசை எதுவாக இருக்க முடியும். நான் ஒரு பறவையானால் என்னால் அந்த கனவை அடைந்து கொள்ள முடியும்.
ஒரே இடத்தில் ஒரே ஊரில் ஒரே நாட்டில் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கழித்து இறந்து போகின்ற நிலை எனக்கு ஏற்படாது. நான் ஒரு உலகம் சுற்றும் பறவை ஆவேன். எல்லா தேசங்களுக்கும் கடல் கடந்து கண்டங்கள் கடந்து அந்த தேசங்களின் அற்புத அழகை நான் காண்பேன்.
வாழ்வில் கிடைப்பதற்கு அரிய அந்த அழகான நினைவுகளை நான் சேகரிப்பேன். மனிதர்களை போல பொறுப்புக்களோ வேலைகளோ பணம் பணம் என்ற நிர்ப்பந்தமோ எனக்கு கிடையாது. என்னை யாரால் தடுத்து விடவும் முடியும்.
என்னை யார் கைது செய்து சிறையில் அடைக்க முடியும். என் மீது யார் பகைமை கொள்ள முடியும். என்னை யார் குறை கூறமுடியும். ஆம் நான் ஒரு சுதந்திர பறவை எனக்கு தெரிந்ததெல்லாம் உயர பறந்து பறந்து கவலைகள் மறந்த அழகான வாழ்வை தான்.
எனக்கு யார் மீதும் போட்டியோ பொறாமையோ கிடையாது. உயர்வு தாழ்வு என்பது யாதெனவும் தெரியாது. இந்த மனிதர்களுக்கு நான் சொல்லி கொள்வது யாதெனில் இந்த நிலையற்ற வாழ்வில் என்னை போல பிறர் மீது அன்பு கொள்ளுங்கள் இயற்கையை பேரன்பு கொண்டு நேசியுங்கள் மகிழ்வாக வாழுங்கள்.
ஆம் நான் ஒரு பறவையானால் இந்த உலகத்தில் என்னை போல யாராலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. என்னிடம் பணம் கிடையாது பதவி கிடையாது ஆனால் மகிழ்ச்சியும் நிம்மதியும் தாராளமாக இருக்கிறது. இதை தானே மனிதர்கள் தேடி அலைகிறார்கள். ஆகவே நான் ஒரு பறவையாகவே வாழ வேண்டுமென்று ஆசை கொள்கிறேன்.
You May Also Like: