மார்க்கண்டேயர் வரலாறு

markandeyar history in tamil

மரணத்தை வென்று மரணமில்லாத பெருவாழ்வு வாழ்பவர்களையே சிரஞ்சீவிகள் என அழைக்கின்றனர். அந்தவகையில் மரணத்தை வென்று சப்த சிரஞ்சீவிகளாக வாழ்ந்தவர்களாக அஸ்வத்தாமா, வியாசர், அனுமான், மகாபலி, விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமர் என்போர் காணப்படுகின்றனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக மார்க்கண்டேயரும்  ஒரு சிரஞ்சீவியாக காணப்படுகின்றார்.  இவர் இறைவன் மீது கொண்ட தூய அன்பினால் இறைவன் அவரை காலனிடமிருந்து காத்து என்றும் பதினாறு வயதுடன் சிரஞ்சீவியாக வாழ ஆசி வழங்கினார்.

இயற்பெயர் – மார்க்கண்டேயர்

தந்தை – மிருகண்டர்

தாய் – மித்ரா தேவி

மார்க்கண்டேயரின் பிறப்பு

மிருகண்டு முனிவரும் அவரது மனைவியாரும் தீவிர சிவ பக்தர்கள் ஆவார்கள். இவர்கள் நீண்ட நாட்கள் குழந்தை பேறு இன்மையினால் பெரும் துன்பத்திற்கு உள்ளாகினர்.

இதனால் மிருகண்டு முனிவர் சிவனை நினைத்து ஓராண்டு காலம் தவம் புரிந்தார். அவரது தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி, “யாது வரம் வெண்டும்?” என வினவினார். மிருகண்டு முனிவர் “புத்திரப் பேறு வேண்டும்” என்று வேண்டினார்.

“அப்படியே ஆகட்டும்” என்று கூறிய சிவபெருமான் முனிவருக்கு புத்திரப்பேறு வரத்தை அளிப்பதற்கு முன்பு  “நூறு வயது வரை வாழும் பிள்ளை வேண்டுமா?  அல்லது பதினாறு வயதே வாழக்கூடிய பிள்ளை வேண்டுமா?

இதில் நூறு வயது வரை வாழும் பிள்ளைக்கு ஊமை, செவிடு, முடம், வியாதி, சகல தீக்குணங்களும் இருக்கும்.

பதினாறு வயது வரை வாழும் புதல்வன் அழகானவனாகவும், சகல கலைகளிலும் வல்லவனாகவும், அன்பு கருணை நிறைந்த நற்பிரஜையாக இருப்பான். இவர்களில் எந்த மாதிரியான புத்திரன் உனக்கு வேண்டும்” என்று கேட்டார்.

முனிவரோ, “நூறு வயது வரை குறைகளுடன் வாழும் பிள்ளையை எவர்தான் வேண்டுவார்,  இறைவா! குறைந்த வயது வாழும் புத்திரனே ஆயினும் சிறந்த குழந்தையாக வாழ்ந்தாலே போதும், எமக்கு குறைந்த வயது வாழும் புத்திரரேயே  தாரும்” என வேண்டினார். இறைவனும் “தந்தேன்” என்று ஆசி வழங்கினார்.

மார்க்கண்டேயரின் ஆரம்ப வாழ்க்கை

மகா புத்திமானாக காணப்பட்ட மார்க்கண்டேயர்  ஐந்து வயதாவதற்கு உள்ளேயே சகல கலைகளையும் கற்று நன்கு தேர்ச்சி பெற்றவராக காணப்பட்டார்.

அத்தோடு மட்டுமல்லாது  பெரியோர்களை மதித்தல், துன்பத்தில் உள்ள உயிரினங்களுக்கு உதவுதல், அதிக சிவ பக்தி ஆகியவையோடும் கண்டோர் விரும்புமளவிற்கு  சிறப்புற  வாழ்ந்தார்.

தனது மரணம் பற்றி அறிதல்

மார்க்கண்டேயருக்கு பதினைந்து வயது முடிந்து பதினாறு வயது ஆரம்பமான நாளிலிருந்து அவரது பெற்றோர்களின் முகத்தில் பெரும் கவலை படர்வதை உணர்ந்த மார்கண்டேயர், பெற்றோர்களிடம் ” நடந்தது யாது? ஏன் இவ்வாறு கவலையாக இருக்கின்றீர்கள்?” என வினவினார்.

அப்போது அவர்களது பெற்றோர் “சிவபெருமானின் வரத்தின்  காரணமாகவே நீ பிறந்தாய். மற்றும் உனக்கு பதினாறு ஆண்டுகால ஆயுளையே எம்பெருமான் அளித்துள்ளார்.” என்று கூறினர்.

இதனைக்கேட்ட மார்கண்டேயர் பெற்றோர்களை நோக்கி, “கவலை கொள்ள வேண்டாம். சிவபெருமானே எமக்கு பதினாறு வயது வரை வாழும் வரம் தந்தார். அவரின் அருளினாலே நாம் மரணமில்லா வாழ்வை பெறுவோம்” என்று கூறி, சிவனை நோக்கித் தவம் புரிய செல்லப் போவதாக கூறினார்.

பெற்றோரும் அவருக்கு ஆசி வழங்கி தவம் புரிய அனுப்பி வைத்தனர்.

அடர்ந்த காட்டின் வழியே தனது பயணத்தை ஆரம்பித்த மார்கண்டேயர், ஒரு ஆற்றங்கரையை அடைந்து அங்கே, ஆற்றுமணலினால்  ஒரு சிவலிங்கத்தை செய்து அதற்கு பூஜை செய்து சிவனை நோக்கி தவம் புரிய ஆரம்பித்தார்.

காலனிடம் இருந்து காப்பாற்றப்பட்டமை

மார்க்கண்டேயரின் ஆயுட்காலம் நிறைவடைந்ததனால், எமதர்மன் அவரது தூதுவர்களை அழைத்து மார்க்கண்டேயரை அழைத்து வரும்படி கூறுகின்றார்.

தவம் புரிந்து கொண்டிருக்கும் மார்க்கண்டேயரை எமதர்மனின் தூதுவர்கள் அணுகுகின்ற போது, அவரை சுற்றி ஒரு ஒளி படலம் சூழ்ந்து காணப்பட்டு, அவரை அணுக விடாமல் தடுக்கின்றது.

இதனால் அச்சம் கொண்ட தூதுவர்கள் எமதர்மனிடம் வந்து நடந்தவற்றை கூறுகின்றனர். எமதர்மன் பாசக்கயிற்றை எடுத்துக்கொண்டு மார்க்கண்டேயரை அழைத்து செல்ல பூலோகம் வருகிறார்.

பூலோகம் வந்த எமதர்மர் மார்க்கண்டேயரை நோக்கி, “மார்க்கண்டேயா என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ? ஈசனார் தந்தது உனக்கு 16 வயது தான் என்பதை மறந்தாயா? நீ புரியும் சிவபூஜை உன் பாவத்தை நீக்குமே தவிர நான் வீசுகின்ற  பாசக்கயிற்றை ஒருபோதும்  தடுக்காது.

பிறப்பு, இறப்பு என்பது அனைவருக்கும் சமம் ஆகும்.” என்று கூறி மார்க்கண்டேயரை தன்னுடன் வரும்படி எமதர்மர் அழைக்கின்றார்.

ஆனால் மார்கண்டேய வர இயலாது என்று மறுத்து விடுகின்றார். இதனால் கோபம் கொண்ட எமதர்மர் தனது பாசக் கயிற்றை எடுத்து மார்க்கண்டேயரின் கழுத்தை நோக்கி வீசுகின்றார். அச்சம் கொண்ட மார்கண்டேயர் சிவலிங்கத்தை இறுக கட்டி அணைத்து கொள்கின்றார்.

எமதர்மனின் பாசக்கயிறு சிவலிங்கத்தையும் சுற்றுகிறது. எமதர்மர் தனது பாசக்கயிற்றை இழுக்க முயற்சி செய்கின்ற போது, மார்கண்டேயர் கட்டித்தழுவிய சிவலிங்கம் அசைவதை மார்கண்டேயர்  உணர்கிறார்.

திடீரென பேரொளியுடனும், பாரிய சத்தத்துடனும் தோற்றம்பெற்ற சிவபெருமான் அக்னி கண்ணலனே கொந்தளித்து கடுங்கோபத்தோடு எமதர்மரை நோக்கி “எனது பக்தனை எவ்வாறு நீ கொல்ல துணிந்தாய்” என்று வினவுகிறார்.

எமதர்மரோ “அவனது ஆயுள் வெறும் 16 வருடங்களே ஆகும். அவை நிறைவு பெற்றுவிட்டன. அதனாலேயே நான் அவனை அழைத்து செல்ல வந்தேன்.” என்று கூறுகின்றார்.

கோபம் தணியாத சிவபெருமான் தனது கோபப் பார்வையால் எமதர்மனை சுட்டெரிக்கின்றார்.

பின்னர் மார்க்கண்டேயரை நோக்கி ” “தீர்க்க ஆயுள் பவ” என்றும்,  நீ என்றென்றும் பதினாறு வயதுடனேயே நீண்ட ஆயுளோடு வாழ்வாய்.” என்று கூறி ஆசி வழங்கி மறைகின்றார்.

எமதர்மன் மீண்டும் உயிர் பெற்றமை

சிவபெருமானின் கோபத்தால் எமதர்மன் மாண்டமையினால்  உலகத்தில் அனைத்து உயிரினங்களின் சமநிலை சீர்குலைந்து பெருக்கம் அதிகரித்து.

இதனால் சிக்கலுற்ற தேவர்கள் சிவபெருமானிடம் சென்று  எமதர்மனை மீட்டுத் தருமாறு வேண்டினர். இதன் விளைவாக  பின்னர் சிவபெருமான் எமதர்மனை உயிர்ப்பித்தார்.

அத்தோடு எமதர்மனுக்கு ஒரு கட்டளையையும் பிறப்பித்தார். தன்னுடைய அனுமதி இன்றி தன்னுடைய எந்தப் பக்தரின்  ஆயுளையும் நிறைவு செய்ய கூடாது என்பது அவரது கட்டளை ஆகும்.

You May Also Like :
பாண்டுரங்கன் வரலாறு
திருமங்கை ஆழ்வார் வரலாறு