உலக கவிதைகள் தினம்

உலக கவிதை தினம்

உலக கவிதைகள் தினம் மார்ச் 21
World Poetry DayMarch 21

கவிதை என்பது நமது கற்பனையில் இருப்பதை வார்த்தைகளாகக் கொண்டுவருவதாகும். கவிதை வார்த்தைகளின் ஓவியம் எனவும், கலைகளின் அரசி எனவும் வர்ணிக்கப்படுகின்றது.

கவிதை என்பது ஒரு அழகான வெளிப்பாடு ஆகும். கவிதையின் அழகான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் மிகுதியை வேறு எந்த இலக்கியமும் உருவாக்கவில்லை.

குழந்தைகளாக இருக்கும் நேரத்தில் நம்மை உறங்க வைப்பதற்கு பாடும் தாலாட்டுப் பாடலும் ஒரு வகையான கவிதையே ஆகும். கவிதை இல்லாமல் நம் வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்க்க முடியாதுள்ளது.

நம் பண்டிகைகளின் வழிமுறைகளுக்கு வாழ்த்துக்களாகவும், திரைப்படங்களில் பாடல்களாகவும், படிக்கும் பாடங்களில் கருத்துக்களாகவும் வாழ்வில் கவிதைகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.

உலக கவிதைகள் தினம்

உலக கவிதைகள் தினம் வரலாறு

கவிதையின் ஆரம்பம் “கில்காமேஷின் காவியத்துடன்” வெளிவந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் எழுத்தறிவு பரவுவதற்கு முன்பே கவிதை இருந்திருக்கலாம்.

வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகையான கவிதைகள் பிரபலமடைந்து மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன.

“தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச கவிதை இயக்கங்களுக்கு புதிய அங்கீகாரத்தையும் உத்வேகத்தையும் வழங்குவதற்காக” பாரிஸில் நடைபெற்ற அதன் 30 வது பொது மாநாட்டின் போது, 1999 இல் யுனெஸ்கோவால் இந்த நாள் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எனினும் ஆரம்பத்தில் சில நாடுகள் மட்டுமே அதனைச் செயல்படுத்தின. இன்று உலகம் முழுக்க படிப்படியாக கவிதை நாளைக் கொண்டாடிவருகின்றன.

அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று உலக கவிதை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக கவிதை தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்

உலகக் கவிதை தினம் என்பது கவிஞர்களைக் கௌரவிப்பதற்கும், கவிதைப் பாடலின் வாய்வழி மரபுகளைப் புதுப்பிப்பதற்கும், கவிதை வாசிப்பு, எழுதுதல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கும், கவிதை மற்றும் நாடகம், நடனம், இசை மற்றும் ஓவியம் போன்ற பிற கலைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்கும், கௌரவிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்காகக் கொண்டுள்ளது.

உலக கவிதைகள் தினம் முக்கியத்துவம்

உலக கவிதை தினம் மனிதகுலத்தின் கலாச்சார மற்றும் மொழியியல் வெளிப்பாடு மற்றும் அடையாளத்தின் மிகவும் பொக்கிஷமான வடிவங்களில் ஒன்றைக் கொண்டாடுகின்றது.

கவிதை வெளிப்பாடு மூலம் மொழியியல் பன்முகத்தன்மையை ஆதரிக்கும் மற்றும் அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாக்கும் வாய்ப்பைத் தருகின்றது.

இந்த நாளின் மூலம் உலகம் முழுவதும் கவிதைகளைக் கொண்டாடவும், அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாக்கவும், கவிதை வெளிப்பாட்டைத் தூண்டவும் வாய்ப்பை வழங்குகின்றது.

உலக கவிதை தினம் கவிதை பிரியர்களின் புதிய தலைமுறையை உருவாக்குகின்றது.

உலக கவிதை தினத்தில், உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் வகுப்பறைகளில் கவிதைகள் மற்றும் கவிஞர்களைக் கொண்டாடவும், எழுதும் பாணியைப் பற்றி தங்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தவும் நேரம் ஒதுக்குகின்றனர்.

மனிதனிடம் மனிதம் தழைத்தோங்க வழிவகை செய்வதில் இலக்கியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதிலும் அழகியல் மிகுந்து காணப்படும் கவிதையே முன்னிலை வகிக்கின்றது.

கவிதை என்றதும் உடனே நினைவிற்கு வருவது காதல்தான். கவிதை எழுதத் தெரியாதவர் கூட காதலித்துவிட்டால் கவிஞராகி விடுவர். ஆனால் கவிதை காதலர்களுக்கு மட்டுமானதல்ல.

கவிதையைப் புரட்சிக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும், இறைவனுக்காகவும், தாய், தந்தை, உடன்பிறப்புக்கள் என எவருக்கும் எதற்கு வேண்டுமானாலும் எழுதுவது வழக்கம். ஒருவர் கூறும் பொய் அழகாக தெரியும் ஒரே இடம் கவிதை மட்டுமேயாகும்.

இத்தகைய கவிதையானது மொழியின் வளர்ச்சிக்கும் உதவுகின்றது என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.

You May Also Like :
உலக எழுத்தறிவு தினம்
உலக தாய்மொழி தினம்