இந்த பதிவில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் “சுத்தம் சுகம் தரும் கட்டுரை” பதிவை காணலாம்.
நாம் அனைவரும் வீட்டில் இருந்தே சுத்தத்தை கடைபிடிக்க பழக வேண்டும். வீட்டில் சுத்தத்தைப் பழகினால் தான் வெளியிடங்களிலும் அதனை கடைபிடிக்கும் பழக்கம் ஏற்படும்.
சுத்தம் சுகம் தரும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சுற்றுப்புறத் தூய்மை
- வீட்டின் தூய்மை
- சுகாதாரக் கேடுகள்
- அண்மைக்கால விளைவுகள்
- முடிவுரை
முன்னுரை
கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி, சுத்தம் சோறு போடும் என்பதெல்லாம் நம் நாட்டில் வழங்கும் சுத்தம் தொடர்பான பழமொழிகள் ஆகும். இவை நாம் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவதாக உள்ளன.
இன்றைய சூழலில் சுற்றுப்புறத் தூய்மை இல்லாத காரணத்தினால் பல விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.
இவற்றிலிருந்து நம்மைப் காத்துக் கொள்ளவும், சுகமான வாழ்வு வாழவும் எப்போதும் தூய்மையாக இருப்பதுடன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும். நல்வாழ்வு தரும் சுத்தம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சுற்றுப்புறத் தூய்மை
வீடும், நாடும் நமது இரு கண்கள் ஆகும். தூய்மை என்பது உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் இடம் ஆகியவற்றினை மட்டுமல்லாது சுற்றுப்புறச் சூழலிலும் இருக்க வேண்டும்.
சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால்தான் மாசற்ற தூய காற்றையும் தூய்மையான குடிநீரும் கிடைக்கும். சுற்றுப்புற தூய்மை இல்லாது விட்டால் அதன் மூலம் பல நோய்கள் ஏற்படும்.
எனவே சுற்றுப்புறத் தூய்மையைத் தவறாது பேண வேண்டும். பொது இடங்களில் குப்பை போடுவது, அசுத்தம் செய்வது, எச்சில் துப்புவது முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டின் தூய்மை
வீட்டின் சுத்தமே நாட்டின் தூய்மையாகும். நாம் வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். நம் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், விரதங்கள், விழாக்கள் என்பன மறைமுகமாக தூய்மையைப் பேணுவதற்காகவே அமையப்பெற்றுள்ளன.
இத்தகைய நாட்களில் வீட்டைச் சுத்தம் செய்து, சாணம் தெளித்துக் கோலமிடுகின்றோம். இதன் காரணம் கிருமிகளை அண்டவிடாமல் இருப்பதற்காகவே ஆகும். எனவே சுத்தத்தை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும்.
அவ்வாறு தொடங்கினால் நாடே தூய்மை பெறும். வீட்டில் சுத்தத்தைப் பழகினால் தான் வெளியிடங்களிலும் அதனை கடைபிடிக்கும் பழக்கம் ஏற்படும்.
சுகாதாரக் கேடுகள்
இன்றைய காலகட்டத்தில் சுகாதாரக்கேடு என்பது பெரிதும் சவாலான ஒன்றாக உள்ளது. நமது நாட்டில் தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. இவற்றால் புகைக் கழிவுகள் பெரிதும் ஏற்படுகின்றன. இவை மனித குலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தொழிற்சாலை கழிவுநீர் குடிநீருடன் கலப்பதனால் இந்நீரைப் பருகும் போது வாந்திபேதி, வயிற்றோட்டம் முதலான நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மட்டுமின்றி பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
போக்குவரத்து பெருக்கத்தால் நச்சுப் புகைகள் காற்றுடன் கலக்கின்றன. இதனால் சுவாசிக்கும் காற்று அசுத்தமாக மாறிவிடுகின்றது. வாகனங்களால் உடல் நலக்குறைவு ஏற்படுவதுடன் அமைதியான வாழ்க்கையையும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளும் சுற்றுப்புறச் சூழலை மாசடையச் செய்கின்றன.
அண்மைக்கால விளைவுகள்
இன்று பல நோய்கள் மனித குலத்தை வாட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் கொரோனா முதலிடம் வகிக்கின்றது.
இதிலிருந்து நம் சமுதாயத்தை பாதுகாத்துக கொள்ளவும் நம்மையும் நம்மைச் சூழவுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது.
அடிக்கடி கைகளைக் கழுவுதல். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவை இன்றியமையாததாகும்.
முடிவுரை
நாம் அனைவரும் எப்போதும் சுத்தமாக இருந்தால் தான் சுகமான மற்றும் ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும்.
இவையே சுத்தத்திற்கும் சுகத்திற்கும் வழிசெய்யும். எனவே குறைவில்லாத செல்வமான நோயற்ற வாழ்வை வாழ சுத்தத்தைக் கடைப்பிடிப்போம்.
You May Also Like: |
---|
ஒழுக்கம் பற்றிய கட்டுரை |
உணவு கலப்படம் கட்டுரை |