இந்த பதிவில் “தூய்மைக்கேடு கட்டுரை” பதிவை காணலாம்.
சூழலில் தூய்மையை பேணுவதன் முக்கியத்துவத்தையும் விழிப்புணர்வையும் எமது பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே ஏற்படுத்த வேண்டும்.
தூய்மைக்கேடு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தூய்மைக்கேடு
- காரணங்கள்
- பாதிப்புக்கள்
- தீர்வுகள்
- முடிவுரை
முன்னுரை
மனிதர்கள் இன்றைய நாட்களில் எதிர்கொள்ள கூடிய பிரச்சினைகளின் ஒரு அங்கமாக தூய்மைக்கேடு காணப்படுகின்றது.
“சுத்தம் சுகம் தரும்.! அசுத்தம் அழிவு தரும்” என்ற ஆன்றோர் வாக்கினை மறந்து சூழல் தொடர்பாக எமக்கு இருக்கும் கடமைகளை நாம் மறந்து போனதன் விளைவு தான் இந்த தூய்மைக்கேடு ஆகும்.
இக்கட்டுரையானது தூய்மைக்கேடு தொடர்பான விடயங்களை விளக்குவதாக அமைகின்றது.
தூய்மைக்கேடு
தூய்மைக்கேடானது பல வழிகளில் ஏற்படுகின்றது. குறிப்பாக நிலம், நீர், வளி ஆகிய அடிப்படை இயற்கை வளங்களில் தூய்மைக்கேடு உண்டாகின்றது.
வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் முறையற்ற கழிவகற்றல் மற்றும் இரசாயன பசளை பாவனை காரணமாக நிலம் மற்றும் நீரும் மாசாக்கத்திற்கு உட்படுகின்றன.
அதேபோல் அதிகளவான வாகனப் பயன்பாடு, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் போன்ற தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களை எரிப்பதனாலும் வளியானது மாசக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றது.
தூய்மைக்கேடு காரணங்கள்
மக்காத அசேதன குப்பைகளை நிலத்தில் தேக்கி வைத்தல் மற்றும் அவற்றை குழி தோண்டி புதைத்தல்.
தொழிற்சாலை மற்றும் வீட்டுக்கழிவுகளை நீர் நிலைகளை அண்டிய பகுதிகளிலும் நீர்நிலைகளிலும் வீசுதல்.
ஆடம்பர மோகத்தினால் அதிகளவில் வாகனங்களை பாவித்தல்.
விவசாயத்தில் அதிக இலாபம் உழைப்பதற்காக அளவற்ற விதத்தில் இரசாயன பசளைகளை பாவித்தல்.
இவற்றை விட சுற்றுசுழலில் எச்சில் துப்புதல், பொது இடங்களில் சிறுநீர் கழித்தல் போன்ற சிறிய தவறுகளும் கூட காரணமாகின்றன.
பாதிப்புக்கள்
தூய்மைகேட்டின் காரணமாக மனித சமூகத்திற்கும் இயற்கை சூழலுக்கும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மாசடைந்த வளியினை சுவாசிப்பதால் மனிதன் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றிற்கு ஆளாகின்றான்.
மாசடைந்த நீரினை பயன்படுத்துவதனால் வாந்தி பேதி, கொலரா போன்ற பல நோய்கள் உண்டாகின்றன.
மேலும் தூய்மைக்கேட்டினால் புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம், நீர் தரமிழப்பு, மண் தரமிழப்பு போன்ற பாரிய சூழல் தாக்கங்களும் ஏற்படுத்தப்படுகின்றன.
தீர்வுகள்
தூய்மைக்கேட்டினை குறைத்து கொள்வதற்கு பல வழிமுறைகளை கையாள முடியும். அதன் மூலம் தூய்மைக் கேட்டினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்கவும் முடியும்.
குறிப்பாக கழிவகற்றலினை முறையாக செயற்படுத்த வேண்டும். கழிவுகளை தேக்கி வைக்காமல் அவற்றை மீள் பாவனைக்கு உட்படுத்துவதன் மூலம் சேரும் கழிவுகளின் அளவினை குறைத்துக் கொள்ளலாம்.
சேதன விவசாயத்தினை ஊக்குவித்தல், அசேதன பொருட்களின் பயன்பாட்டை குறைத்தல், இலத்திரனியல் வாகனப் பயன்பாட்டை அதிகரித்தல் போன்றவற்றால் தூய்மைகேட்டினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
முடிவுரை
இந்த உலகம் நிகழ்காலத்தில் வாழும் எமக்கானது மட்டுமல்ல எதிர்காலத்தில் வாழக் கூடிய எமது சந்ததியினருக்கும் சொந்தமானதாகும். எனவே தூய்மைக்கேட்டின் காரணமாக பூமியில் இருக்கக் கூடிய வளங்களை அழிக்காமல் பாதுகாத்து நிலைத்திருக்கும் வகையில் அவற்றை பயன்படுத்த வேண்டும்.
சூழலில் தூய்மையை பேணுவதன் முக்கியத்துவத்தையும் விழிப்புணர்வையும் எமது பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே ஏற்படுத்த வேண்டும். தூய்மையான சூழல் வளமான எதிர்காலத்திற்கான ஆணிவேர் என்பதை உணர்ந்து செயற்படுவோமாக.
You May Also Like: |
---|
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை |
சூழல் மாசடைதல் கட்டுரை |