தைப்பொங்கல் சிறுவர் கட்டுரை

Pongal Katturai In Tamil

தமிழர்கள் பல விழாக்களும் பண்டிகைகளும் கொண்டாடுகின்றனர் அவற்றுள் ஒன்றான தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பற்றி இந்த “தைப்பொங்கல் சிறுவர் கட்டுரை” பதிவில் காணலாம்.

இந்த பண்டிகை நான்கு(04) நாட்கள் கொண்டாடப்படுகின்றது. அவை

  1. போகி பண்டிகை
  2. சூரியப் பொங்கல்
  3. மாட்டுப் பொங்கல்
  4. காணும் பொங்கல்

தைப்பொங்கல் சிறுவர் கட்டுரை – 1

தமிழர் திருநாள் என்று போற்றப்படுகின்ற தை முதலாம் நாள் உலக தமிழர்களால் தைப்பொங்கல் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தை மாதம் என்பது தமிழர்களை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான மாதமாகும்.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்று கூறுவார்கள். ஒரு புதிய வருடத்தினை மகிழ்ச்சியாக ஆரம்பிக்கின்ற இந்த பண்டிகையானது தமிழர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமானதாகும்.

தை பொங்கல் நிகழ்வானது இந்த உலகத்தில் தோன்றிய உயிர்கள் அவற்றின் பசியினை போக்கும் விவசாயிகள் தமக்கு எல்லா வகையிலும் உதவுகின்ற சூரியனுக்கு நன்றி கடன் செலுத்துவதாக இந்த பண்டிகையானது அமைகின்றது.

இந்த பொங்கல் நிகழ்வானது விவசாயிகள் தமது உழைப்பின் மூலம் விளைந்த புது அரிசி மற்றும் பால் போன்றவற்றை இட்டு பானையில் வீட்டு முற்றத்தில் அழகாக பொங்கல் இடுவார்கள். பால், சர்க்கரை, அரிசி, பயறு என்பனவற்றை இட்டு தித்திப்பு நிறைந்த பொங்கலை பொங்கி சூரியனுக்கு படையலிட்டு தமது உறவினர்கள் அயலவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து மகிழ்ச்சியாக உண்பார்கள்.

தைபொங்கல் என்பது கிராமங்களில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். இது தமிழர்களின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துகின்ற ஒரு பண்டிகையாக பார்க்கப்படுகின்றது. புது பானையில் பாலானது பொங்குவதனை போல மக்கள் மனங்களிலும் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

தமிழர்கள் தமது வாழ்வியலில் செய்நன்றி மறவாமல் இருக்க வேண்டும் என்கின்ற உயரிய தத்துவத்தை இந்த பொங்கல் திருநாள் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.

அத்துடன் இந்த உலகமும் எமக்கு உணவழிக்கும் விவசாய பெருமக்கள் மீது நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் என தைபொங்கல் ஞாபகமூட்டி செல்கின்றது.

தைப்பொங்கல் சிறுவர் கட்டுரை – 2

தமிழர்களுடைய வாழ்வியல் என்பது பல அர்த்தங்கள் நிறைந்ததாகும். இந்த தைப்பொங்கல் பண்டிகையானது வந்து விட்டால் மக்கள் மிகவும் உற்சாகமாக இயங்க துவங்குவார்கள் துவண்டு கிடந்த வாழ்வில் புது வெளிச்சம் பாய்ச்சியது போல புது நம்பிக்கை ஆனது மக்கள் மனதில் தோன்ற ஆரம்பிக்கின்றது.

தமிழர்கள் இயற்கையின் மீது அதீத நம்பிக்கையும் பற்றும் கொண்டவர்கள் இதனால் தான் விவசாயம் செய்ய சூரியனுடைய உதவி நிச்சயமாக தேவை ஆதலால் இந்த தைபொங்கல் என்ற பண்டிகையினை சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக கொண்டாடுகின்றனர்.

கிராமங்களில் கோலாகலமாக தை முதலாம் நாள் தைபொங்கல் நிகழ்வானது கொண்டாடப்படுகின்றது. வீட்டு முற்றத்தில் அழகாக மெழுகி மாவிலை தோரணங்கள் கொண்டு அலங்கரித்து அழகான கோலம் இட்டு அதிகாலையில் எழுந்து சூரியன் உதிக்க முன்னரே புது பானையில் புதிதாக அறுவடை செய்த பொருட்களை கொண்டு பொங்கி சூரியனுக்கு படையல் செய்து வழிபடுவார்கள்.

குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து அன்பையும் ஆதரவையும் பரிமாறி கொள்ள இது போன்ற பண்டிகைகள் களமாக அமைகின்றன. மற்றும் இந்த நன்னாளில் பல புதிய வேலைகளையும் முயற்சிகளையும் ஆரம்பித்தல் வழக்கமாக உள்ளது.

சிறப்பாக இந்த பொங்கல் திருநாளை அடுத்து வரும் நாளில் உழவு தொழிலுக்கு உதவுகின்ற கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதாக “பட்டிபொங்கல்” நிகழ்வானது இடம்பெறுவது வழக்கமாகும்.

இந்த பொங்கல் திருநாளானது உழவுத்தொழிலையும் தமிழர்கள் பெருமையையும் உலகுக்க எடுத்து காட்டுகின்ற பண்டிகையாக விளங்குகின்றது.

You May Also Like:

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை

தீபாவளி பண்டிகை பற்றிய கட்டுரை