மதம் பற்றிய கட்டுரை

matham katturai in tamil

இந்த பதிவில் “மதம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

மதரீதியான வேறுபாடுகளை தவிர்ப்பதன் மூலமே அமைதியான ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

மதம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மதம் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்
  • மதம் கூறும் நற்கருத்துக்கள்
  • மதப் பல்வகைமை
  • மத நல்லிணக்கமும் சகிப்புத் தன்மையும்
  • முடிவுரை

முன்னுரை

மனிதன் தோன்றிய காலம் தொட்டே மதங்களும் தோன்றியதாக வரலாறுகள் குறிப்பிடுகின்றன. மனிதனே கடவுள்களால் படைக்கப்பட்டதாக பல மதங்கள் குறிப்பிடுகின்றன. எது எவ்வாறு இருப்பினும் மதங்களானவை மனிதனை நல்வழிப்படுத்தவே உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த உலகில் பல்வேறு வகையான மதங்களை பின்பற்றுகின்ற பலதரப்பட்ட கலாசாரப் பிண்ணனி கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே மக்களிடம் சகிப்புத் தன்மையையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க மதங்களைப் பற்றியதொரு புரிதல் காணப்படுவது அவசியமாகும்.

மதம் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்

மதம் என்றால் என்ன மதங்கள் எவற்றையெல்லாம் மனிதர்க்கு தருகின்றது என்பதனைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

“மதம் பல கிளைகளைக் கொண்ட ஒரு மரமாகும். கிளைகள் என்ற முறையில் பல மதங்கள் இருப்பதாக நீங்கள் சொல்லக் கூடும். ஆனால் மரமாக இருக்கும் மதம் என்னமோ ஒன்றுதான்” என்று கூறுகின்றார் காந்தியடிகள்.

“ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகில் இதயமாகவும், ஆன்மா இல்லாத நிலைமைகளில் ஆன்மாகவும் செயற்படுகின்றது” என்கின்றார் கார்ல் மார்க்ஸ்.

மதம் கூறும் நற்கருத்துக்கள்

மதங்கள் எனப்படுவது கடவுளை அறிந்து கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டவை ஆகும். மதங்கள் மனிதனிற்கு நற்பழக்க வழக்கங்கள் மற்றும் நல்ல சிந்தனைகளை தோற்றுவிக்கின்றன.

மனிதனின் ஆன்மா இலக்கின்றி அலைந்து கொண்டிருக்கும் போது மதங்கள் மனிதனிற்கு சரியான பாதையை காட்டுகின்றன. சமூகத்தை சரியான கட்டமைப்பிற்குள் வைத்திருப்பதில் மதங்களின் பங்கு அளப்பரியது.

சிறுவயதில் இருந்தே ஒழுக்கமாக வாழ்வதற்குரிய வழிமுறைகளை மதங்கள் கற்பிக்கின்றன. மதங்கள் அன்பு வழியிலே இயங்குகின்றன. இரக்கம், அன்பு, சாந்தம், ஒற்றுமை மற்றும் அமைதியையும் கற்றுத் தருகின்றன.

அனைத்து மதங்களும் வெவ்வேறு கடவுள்களைக் கொண்டிருந்தாலும் அவை கூறும் கருத்துக்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று ஒத்தவையாகக் காணப்படுகின்றன.

மத பல்வகைமை

இந்தியா மதப் பல்வகைமை கொண்ட ஒரு நாடாகும். இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் என கிட்டத்தட்ட ஏழுற்கும் மேற்பட்ட மதங்கள் இங்கு காணப்படுகின்றன.

இந்தியா அனைத்து மதங்களையும் மதிக்கின்ற அனைத்து விதமான மதத்தினரையும் வாழ அனுமதிக்கின்ற மதச்சாரபற்ற நாடாக விளங்குகின்றது.

இங்கு வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய மதத்தின் மேல் அதீத பற்றுக் கொண்டவர்களாகவும் தங்களுடைய கலாசார அடையாளங்களை பேணி பாதுகாக்கின்றவர்களாகவும் வாழ்கின்றனர்.

மத நல்லிணக்கமும் சகிப்புத் தன்மையும்

இந்தியாவைப் போன்ற மதப் பல்வகைமை கொண்ட நாட்டிலே மதங்களிற்கிடையிலான நல்லிணக்கமும், ஏனைய மதங்களின் மீதான சகிப்புத் தன்மையும் அவசியமாகும்.

“ஒரே இடத்தில் கூடும் பல சாலைகள் போன்றவை மதங்கள்” என்று குறிப்பிடுகின்றார் காந்தியடிகள். கடவுள்களும் வழிபடும் முறைகளும் வெவ்வேறே தவிர மதங்கள் மனிதனிற்கு ஒரே வழியை தான் கற்றுத் தருகின்றன.

பலதரப்பட்ட மதத்தினர் வாழ்கின்ற இந்நாட்டில் மதங்களிற்கிடையே நல்லிணக்கமும் புரிதலும் காணப்படுகின்ற போதும், மதத்தின் பெயரால் கருத்துமோதல்களும் கலவரங்களும் ஏற்படவே செய்கின்றன.

அதீத மதப்பற்றும் தம்முடைய மதமே உணர்ந்தது என்கின்ற நிலைப்பாடுமே இதற்கு காரணமாகும்.

முடிவுரை

அனைத்து மதங்களும் மதிப்பிற்குரியன. அனைத்து மத பண்டிகைகளும் கொண்டாட்டத்திற்குரியன. மதரீதியான வேறுபாடுகளை தவிர்ப்பதன் மூலமே அமைதியான ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

ஒவ்வொரு மதத்தினரும் அவர்களுடைய மதத்தை கடைப்பிடுப்பதற்குரிய இடைவெளியை வழங்கி மத நல்லியக்கத்துடன் வாழ்வோமாக.

You May Also Like :
தீண்டாமை ஒழிப்பு கட்டுரை
சமூக நல்லிணக்கம் கட்டுரை