காலம் தோறும் மெய்யடியார்களும், ஞானியர்களும் தோன்றி இந்து மதத்தின் இருப்பை உறுதிப்படுத்தி வந்துள்ளனர். இப்பரம்பரையில் வந்தவரே வீரத்துறவி விவேகானந்தர் ஆவார்.
அமெரிக்கா வரை சென்று சிகாகோ சர்வ சமய மாநாட்டில் பேசி உலகின் கவனத்தைப் பெற்றவராகவும், பொய்யடிமையில்லாத வாழ்வு வாழ்ந்தவராகவும் காணப்படுகிறார். இவரது அளப்பரிய சேவைகளினாலும் இந்து சமயம் மேன்மை அடைந்தது.
இயற்பெயர் | நரேந்திரநாத் தத்தர் |
பிறப்பு | 1863 ஜனவரி 12 |
பிறந்த இடம் | கல்கத்தா |
தாய் | புவனேஸ்வரி தேவியார் |
தந்தை | விசுவநாததத்தர் |
இறப்பு | 4 யூலை 1902 |
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
இவர் இளமையிலேயே கடவுள் பற்று மிகுந்தவராக காணப்பட்டார். அதேவேளை துடுக்குத்தனம் மிகுந்தவராகவும் விளங்கினார். நீராட்டும் வேளையில், அவரது தாயார் “சிவசிவ” என அவரது காதில் ஓதுவார். அதைக் கேட்டதும் இவரது துடுக்குத்தனம் அடங்கிவிடும்.
இவர் தனது ஆறாவது வயதில் பாடசாலைக்கு சென்று 1878 இல் மெட்ரிக் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின் கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.
ஒரு வருடம் கழித்து கல்கத்தாவிலுள்ள ஸ்கெட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். வங்காளம், ஆங்கிலம், சமஸ்கிருதம் முதலான மொழிகளைக் கற்றார். இம்மொழிகளில் உள்ள இலக்கியங்களை விரும்பி படித்தார்.
சின்ன வயதிலேயே இவருக்கு ஞாபக சக்தி அதிகம், மனதினை ஒருமுகப்படுத்தி படிக்கும் சக்தியை கல்லூரியில் கற்கும் காலத்தில் வளர்த்துக் கொண்டார். அதனால் குறுகிய காலத்திற்குள் அவரால் அதிகமான நூல்களை படிக்க முடிந்தது.
பண்டைய கிரேக்க, ஜெர்மன் தத்துவங்களையும் பைபிள், குரான் முதலிய நூல்களையும் ஆராய்ந்தார்.மேலைத்தேய, கீழைத்தேய நூல்களை ஒழுங்குறக் கற்று கலைப்பட்டதாரி ஆனார்.
நூல் அறிவுடன், நாவன்மை, சங்கீத, நாடக கலை, ஞானம் என்பன அவரிடம் ஒருங்கே மிளிர்ந்தன. விளையாட்டுகளிலும் திறமை மிக்கவராக விளங்கினார். கேட்போரை கவரும் சொல்லாற்றல் எதற்கும் அஞ்சாத மன உறுதி உடையவராகவும் காணப்பட்டார்.
இராமகிருஷ்ணர் சந்திப்பு
18 வயது நிரம்பிய இவ்வாலிபனது உள்ளத்தில் பல ஐயங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமானது கடவுள் பற்றியது ஆகும். கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? அவரை காண முடியுமா? என்ற வினாக்களை பலரிடம் கேட்டார். தகுந்த பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் தட்சினேஸ்வரத்து, ராமகிருஷ்ணரை முதன் முதலாக 1881ஆம் ஆண்டு சந்தித்தார். எளிமையான தோற்றத்துடன் நூலறிவு அனுபவ ஞானம் கைவரப் பெற்று இறை அனுபவத்தில் மூழ்கித் திளைத்த ராமகிருஷ்ண பரமஹம்சரை, ஆங்கில அறிவு வாய்க்கப்பெற்ற இளைஞனாகிய நரேந்திரன் சந்தித்தது முக்கியமான நிகழ்ச்சி.
பழைய பாரதத்தை புதிய பாரதம் சந்திப்பது போல இவர்களது சந்திப்பு அமைந்தது.
இராமகிருஷ்ணரை கண்டதும் அவரிடம்,” கடவுளை கண்டு இருக்கின்றீர்களா?”, என வினவினார். அதற்கு இராமகிருஷ்ணர் “நான் கடவுளை கண்டுள்ளேன்” என்று தனது அனுபவ ரீதியான உண்மைகளை எடுத்துரைத்தார்.
அதைக் கேட்டு உள்ளம் பூரித்த நரேந்திரன் அன்று முதல் இராமகிருஷ்ண பரமஹம்சரை தனது குருவாக ஏற்று அடிக்கடி தக்கிணேசுவரம் சென்று ராமகிருஷ்ணரது வார்த்தைகள் ஒவ்வொன்றையும் சீர்தூக்கிப் பார்த்து ஏற்றுக்கொள்வார்.
சமூகப்பணி
1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தி சாதி ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்ததும் அவரது சீடர் குழுவின் தலைமைப் பொறுப்பு முழுவதும் இவரை சேர்ந்தது.
நரேந்திரன் துறவி வாழ்க்கையை விரும்பி ஏற்றார். துறவியின் பெயர் சுவாமி விவேகானந்தர் என ஆயிற்று. தமது குருநாதரது கருத்துப்படி, மக்கள் சமூகத்திற்கு சேவை செய்வதே தன் கடமை என கொண்ட சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் இமாலயம் தொடங்கி கன்னியாகுமரி வரை யாத்திரை மேற்கொண்டார்.
அறியாமை எனும் இருளால் இந்திய மக்கள் படும் இன்னல்களைக் கண்டு அவரது நெஞ்சம் வருந்தியது. மக்கள் ஒவ்வொருவரும் சுதந்திர உணர்ச்சியும், துணிவுடனும் இருக்க வேண்டும் என பல பிரச்சாரம் செய்தார்.
சமயப் பணி
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள கொலம்பஸ் மண்டபத்தில் அகில உலக சமயங்களின் மாநாடு தொடங்கியது.
சமய போட்டிகள் பூசல்கள் மிகுந்திருந்த இக்காலகட்டத்தில் முதன் முதலாக சர்வமத மாநாடு கூட்டப்பட்டு பலரது வரவேற்பை பெற்றது.
இம்மாநாட்டிற்கு அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்து மதத்தின் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தர் பங்குபெற்று, அமெரிக்க நாட்டவரை “அமெரிக்க நாட்டு சகோதர சகோதரிகளே” என விளித்து தனது பேச்சை ஆரம்பித்தார்.
அவருடைய வார்த்தைகள் யாவும் மேனாட்டு மக்களிடம் ஆன்மிக உணர்ச்சிகளை தூண்டி விட்டன. இவரது புகழ் அமெரிக்காவில் மட்டுமன்றி பல ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது.
அமெரிக்காவில் இந்து சமய அறிவை புகட்டுவதற்காக நகரில் வேதாந்த சங்கம் ஒன்றை நிறுவினார். அத்துடன் லண்டன், இலங்கை போன்ற பல்வேறு நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட இந்து மதத்தின் உண்மை தன்மைகளை தனது கருத்துக்களின் மூலம் வலுப்படுத்தினார்.
அத்துடன் இராமகிருஷ்ண சங்கம், இராமகிருஷ்ண மடம் போன்றவற்றை ஆரம்பித்தார். இலங்கையிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இவற்றுக்கான நிலையங்களை அமைத்தார்.
பொன்மொழிகள்
“உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.”
“கடவுள் இருந்தால் அவரை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லை யென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு செய்வதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.”
“உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகைத் தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.”
“செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து.. அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.”
நூல்கள்
விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுதிய எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் என்பன தொகுக்கப்பட்டு தமிழில் “விவேகானந்தரின் ஞான தீபம்” என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
You May Also Like : |
---|
வள்ளலார் வாழ்க்கை வரலாறு |
கணக்கன்பட்டி சித்தர் வரலாறு |