கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கட்டுரை

Koodi Vazhnthal Kodi Nanmai In Tamil

இந்த பதிவில் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கட்டுரை” பதிவை காணலாம்.

தனித்து வாழ்வதை விட கூடிவாழும் போது நமக்காகப் பலபேர் உள்ளார்கள் என்ற தைரியம் கிடைக்கும்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கூடி வாழ்தலின் அவசியம்
  3. ஒற்றுமையே பலம்
  4. கூடி வாழ்தலின் நன்மைகள்
  5. தனித்து வாழ்தலால் ஏற்படும் பாதிப்புக்கள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகில் மனிதன் தனித்து வாழ்வது இயலாத ஒன்றாகும். இந்த உலகம் பல அபூர்வங்களை கொண்டது. இங்கு யாரும் தனித்து வாழ்வது கடினம். ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்பது தான் சிறந்தது.

தனி மனிதர்களால் சாத்தியமாகாத விடயங்கள் கூட ஒன்றுபட்டால் சாத்தியமாகும். தனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

தனி ஒருவரை விட கூட்டாக சேரும் போதுதான் பலம் அதிகமாக இருக்கும். ஒற்றுமையுடன் ஒன்றாக இணைந்து வாழும் போது பல கோடி நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வகையில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கூடி வாழ்தலின் அவசியம்

“தனிமரம் தோப்பாகாது” என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு கை தட்டி ஓசை எழாது. இரு கையும் சேர்ந்தால் தான் ஓசை எழும். அதுபோல மனிதர்கள் இணைந்தால் தான் செயல் சிறக்கும்.

குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒற்றுமை அவசியம். வாழ்வு சிறக்க கூடிவாழ்தல் அவசியமாகும். ‘யான் மட்டும் தனியாக வாழ்வேன்’ என்பது இயலாத காரியம்.

தனித்திருக்கும்போது வரும் தாக்குதல்கள் வாழ்வைத் தகர்த்து விடும். துன்பங்களிலிருந்து மீள ஒன்றிணைந்து வாழ்வது முக்கியமாகும். ஒன்றுபட்டு உழைப்பதன் மூலமே எதனையும் சாதித்துக் கொள்ளலாம்.

ஒற்றுமையே பலம்

‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு’ என்கிறார் மகாகவி பாரதியார். ஒருவனின் வெற்றியின் பிண்னணியில் நிச்சயமாக விடாமுயற்சியோடு ஒற்றுமையையும் இணைந்திருக்கும்.

ஒற்றுமை உயர்ச்சி தரும். உலகில் ஏற்பட்ட பெரும் புரட்சிகள் எல்லாம் தனி மனிதனால் ஏற்பட்டவையல்ல. மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியின் மூலமும் ஒற்றுமையின் மூலமும் ஏற்பட்டவை எனலாம். இவை ஒற்றுமையின் பலத்தையே உணர்த்துகின்றன.

கூடி வாழ்தலின் நன்மைகள்

கூடி வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும். ஒற்றுமை வளரும். சிற்றெறும்புகள் பல ஒன்று சேர்ந்து தமது உணவுப் பொருள்களை நகர்த்திச் செல்வது, தேனீக்கள் பல சேர்ந்து தமக்கான கூட்டை அமைத்துக் கொள்வது

இவை அனைத்தும் கூடிவாழ்ந்தால் ஏற்படும் நன்மையினேயே நமக்கு உணர்த்துகின்றன. கூடித் தொழில் செய்யும் போது காலம் மீதமாகி காரியம் எளிதில் கைகூடுகிறது.

தனித்து வாழ்தலால் ஏற்படும் பாதிப்புக்கள்

வாழ்க்கையில் தனித்து வாழும் போது துன்பங்கள் ஏற்படும் போது ஆறுதலுக்கு யாரும் இருக்க மாட்டார்கள். பேச்சுத் துணைக்கு என்று கூட முதுமைக் காலங்களில் ஒருவரும் இல்லாமல் கஷ்டப்படும் நிலைதான் ஏற்படும்.

இதனால்தான் “கொடிது கொடிது முதுமையில் தனிமை” எனக் கூறுவர். தனிமையில் இருக்கும் போது மன அழுத்தத்தில் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர், மன நோயாளிகளாக மாறும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றது.

முடிவுரை

தனித்து வாழும் போது துன்பங்களும் மன அழுத்தங்களுமே ஏற்படும். ஆனால் கூடிவாழும் போது நமக்காகப் பலபேர் உள்ளார்கள் என்ற தைரியம் கிடைக்கும்.

வாழ்வில் துன்பங்கள் வந்து துவண்டு விடும் போதும் ஆறுதலுக்கு நம்முடன் பலபேர் இருப்பார்கள். குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒற்றுமை உறுதியாக நிலைபெற வேண்டுமெனில் கூடி வாழ வேண்டும்.

கூடி வாழ்ந்தால் மனித வாழ்வின் இலட்சியங்களை இலகுவாக நிறைவேற்ற முடியும். கூடி வாழ்ந்து கோடி நன்மை பெறுவோம் உயர்வு காண்போம்.

You May Also Like :
உடல் நலம் காப்போம் கட்டுரை
சமூக நல்லிணக்கம் கட்டுரை