எல்லா மக்களும் தன் நலனுக்காக உண்ணாமல் விரதம் நோற்கின்றனர். ஆனால் சமயபுரம் மாரியம்மன் பக்தர்களுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என்பதற்காக பட்டினி விரதம் இருக்கும் தாய் தெய்வமாக காணப்படுகிறார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களுக்கும் முதன்மை சக்தி பீடமாகவும், மாரியம்மன்களுக்கு எல்லாம் தலைவியாகவும் திகழ்பவள் சமயபுரம் மாரியம்மன் ஆவார்.
சிவந்த மேனியுடன், ஆக்ரோஷமான உருவத்துடன் காட்சியளித்தாலும் கருணை உள்ளத்தோடு பக்தர்கள் வேண்டும் வரத்தை உடனே கொடுத்து ஆசி வழங்கும் தெய்வமாவாள்.
தக்க சமயத்தில் பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதனால் இவரை சமயபுரத்து மாரியம்மன் என அழைக்கின்றனர்.
மூலவர் | ஆதிமாரியம்மன் |
தல விருட்சம் | வேப்பமரம் |
அமைவிடம்
திருச்சியில் காவிரியாற்றுக்கு கரையோரத்தில் இருந்து வடக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு திசையில் மகா சக்தி பீடமாக சமயபுரம் மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத் தோற்றம்
இக்கோவில் பதினெட்டாம் நூற்றாண்டு கட்டப்பட்டது என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சமயபுரத்து அம்மன் சிலை 700 ஆண்டுகள் அல்லது 800 ஆண்டுகள் முன் உருவானதாகவும், மிகவும் பழமை வாய்ந்ததாக காணப்படுவதாகவும் மேலும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
சமயபுரம் மாரியம்மன் வரலாறு
எமதர்மனிடம் இருந்து தன்னுடைய உயிரை காப்பாற்றி கொள்வதற்காக சிவபெருமானிடம் சரண் அடைந்த மார்கண்டேயரை காப்பாற்ற சிவபெருமான் காலசம்கார மூர்த்தியாக அவதாரம் எடுத்து எமதர்ம ராஜனை கொன்றளிக்கிறார்.
இதனால் பிரபஞ்சத்தில் ஜனனம், மரணம் என்பவற்றில் அதிக குழப்பம் ஏற்பட்டு நோய்களின் அதிபதியான மாயாசுரன் அதிக அளவில் நோய்களைப் பரப்பி மக்களை துன்புறுத்துகின்றான்.
இதனைக் கண்டு கோபம் கொண்ட பார்வதி தேவி தன்னுடைய அம்சமாக மாரியம்மனை உருவாக்கி, மாயாசுரனை வதம் செய்ய அனுப்புகிறார்.
மாரியம்மனும் மாயாசூரனையும் அவனுடைய சகோதரர்களையும் வதம் செய்து அவர்களுடைய தலையை ஒட்டியானமாக அணிந்து நோய்களின் கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றினார்.
பின்னர் சிவபெருமானிடம் ஆசி பெற்று மாரியம்மன் அண்ணனான விஷ்ணு பகவான் 108 திவ்யதேசங்களுள் முதன்மையான திருத்தலமான திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வைஷ்ணவதேவியாக அருள்புரிந்து வந்துள்ளார்.
ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் இருந்த வைஷ்ணவி அம்மன் சிலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது, உடனே அங்கு இருந்த சுவாமிகள் ஓடிச் சென்று பார்த்தபோது அங்கு அம்மன் மிகவும் உக்கிரமாகவும், அவரது கோரைப் பற்கள் வெளிவந்தும், சிவந்த கண்களாகவும் காணப்பட்டதால் அச்சமடைந்து உடனே “ஏன் இவ்வாறு உக்கிரமாக இருக்கின்றாய் தாயே? ” எனக் கேட்டபோது,
அசரீரி சத்தமாக “மக்கள் அசூரி என்கிற அம்மை நோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். அவர்களை நான் தான் பாதுகாக்க வேண்டும். அதனால் என்னை இவ்விடம் விட்டு வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று தனி சன்னிதியில் அம்மனாக பிரதிஷ்டை செய்யுங்கள். நானே உங்களுக்கு ஒளியாக இருந்து வழிகாட்டுகின்றேன் அந்த இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்து விடுங்கள்.” என்று கேட்டது.
ரங்கநாதர் கோவிலிலிருந்து வைஷ்ணவி சிலையை வேறொரு இடத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்து, ஸ்ரீரங்கநாதர் கோவிலில் இருந்து வைஷ்ணவி சிலையை தூக்கிக்கொண்டு பள்ளத்தில் பயணமாயினர்.
இரவு முழுவதும் அம்மன் ஒளியாக வந்து வழி காட்டினார். பொழுது விடியும் தருவாயில் மறைந்து விட்டார். கண்ணனூர் அரண்மனைக்கு அருகில் பல்லக்கை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தனர்.
பின்னர் மீண்டும் பயணம் மேற்கொள்ள எண்ணி சிலையை தூக்க முயன்ற போது சிலையை அந்த இடத்திலிருந்து நகர்த்த முடியவில்லை. மறுபடியும் அசரீரி ஒலி “என்னை இந்த வேப்ப மரங்கள் நிறைந்த இடத்திலேயே விட்டுச் செல்லுங்கள். நான் இங்கேயே வசிக்கின்றேன். மக்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற நான் இங்கேயே தான் இருக்க வேண்டும். ஆகவே என்னை விட்டு நீங்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் செல்லுங்கள்.” கேட்டது.
பின்னர் அவர்களும் வைஷ்ணவி சிலையை அங்கேயே விட்டுச் சென்றனர். அவ்விடத்திலே மாரியம்மன் குடிகொண்டு மக்களின் கொடிய நோய்களையும், துன்பங்களையும் நீக்கினார்.
கி.பி 1706 இல் விஜயநகர நாயக்க மன்னனான, விஜயநகர சொக்கநாத நாயக்கர் தென்னாட்டின் மீது படையெடுத்து செல்லும்பொழுது இந்த அம்மனை வணங்கி விட்டு சென்றமையாலே வெற்றியடைந்ததாகவும், அதற்காக சமயபுரத்தில் இந்த அம்மனுக்கு பிரமாண்டமாக தனி கோயில் அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுவே தற்காலத்தில் சமயபுரம் மாரியம்மன் ஆலயமாக திகழ்கிறது.
பூச்சொரிதல் விழா
மாசி மாதம் கடைசி ஞாயிறு தொடக்கம் பங்குனி கடைசி ஞாயிறு வரை ஒவ்வொரு வாரமும் வெகு சிறப்பாக பூச்சொரிதல் விழா இடம் பெறுகிறது. இந்த பூச்சொரிதல் விழா தங்கச்சியான மாரியம்மனுக்கு அண்ணனான ஸ்ரீரங்கரால் கொண்டுவரப்படும் பூக்களால் முதல் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.
அதாவது, ஸ்ரீரங்கநாதன் ஆலயத்தில் இருந்து கொண்டு வரப்படும் பூவால் முதல் பூச்சொரிதல் இடம்பெறும்.
இப்பூச்சொரிதல் நிகழ்வானது உலக நன்மைக்காகவும், கொடிய நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கவும் மற்றும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டி சிவபெருமானை நோக்கி மாசி மாத கடைசி ஞாயிறு தொடக்கம் பங்குனி கடைசி ஞாயிறு வரையான 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பதாகவும், விரத நாட்களில் தளிகைக்கு பதிலாக துல்லிமாவும், வெள்ளரிப்பிஞ்சும், பாசிப்பருப்பும் இளநீரும் படையலாக படைக்கப்படுகிறது.
சிறப்பு
புராண வரலாறுகளின்படி இராமபிரானின் தந்தையான தசரத மகாராஜா மற்றும் உஜ்வேனியை ஆட்சி செய்து வந்த விக்ரமாதித்தனும் இந்த அம்மனை தரிசனம் செய்து ஆசி பெற்று போருக்கு சென்றதாக கூறப்படுகிறது.
சமயபுரத்தில் உள்ள அம்மன் சிலை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. அதனால் இந்த ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு அபிஷேகம் ஏதும் செய்யப்படுவதில்லை.
You May Also Like : |
---|
மாசாணி அம்மன் வரலாறு |
ஆதி சங்கரர் வரலாறு |