என் கனவு இந்தியா கட்டுரை

En Kanavu India Katturai In Tamil

இந்த பதிவில் “என் கனவு இந்தியா கட்டுரை” பதிவை காணலாம்.

நான் காண விரும்பும் இந்தியா தேசத்தில் ஊழலற்ற⸴ அறிவார்ந்த மக்களோடு உயர்ந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடாக மிளிர வேண்டும்.

என் கனவு இந்தியா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இந்திய தேசத்தின் சிறப்புகள்
  3. பொருளாதாரம்
  4. கல்வி
  5. வறுமையற்ற இந்தியா
  6. முடிவுரை

முன்னுரை

இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காகவும்⸴ விடுதலைக்காகவும் உயிர் நீத்த தியாகிகளின் நெஞ்சத்தை மறக்க முடியுமா? இளைஞர்கள் மனதில் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

இன்று எமது நாடு அரசியல்வாதிகளின் மலிவான லஞ்சம்⸴ ஊழல்⸴ மனித குலத்தின் சாதிய பேதம்⸴ வன்முறை⸴ தீவிரவாதம் போன்றவற்றால் துவண்டு கிடக்கின்றது.

நம் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று எனக்குள் ஓர் அழகான கனவு உண்டு. அந்த என் கனவு இந்தியா பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

இந்திய தேசத்தின் சிறப்புகள்

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்” என்ற வள்ளுவரின் கூற்றுக்கிணங்க அத்தனை சிறப்பம்சங்களையும் என் இந்திய தேசம் கொண்டுள்ளது.

இந்திய தேசமானது மிகவும் அழகான இயற்கை அழகையும்⸴ இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்ட நாடாகும். தனித்துவமான பண்பாடு⸴ கலாச்சாரத்தையும் கொண்டுள்ளது. இன்றளவும் உலக அரங்கில் தனது தனித்தன்மையை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி⸴ அணுவாயுத அரங்கின் சிறப்பிடம் போன்றவற்றில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. வல்லரசாகி கொண்டிருக்கும் என் இந்திய தேசத்திடம் என்ன இல்லை? இல்லாதது என்று எதுவும் இல்லை.

இத்தகைய சிறப்புகளை கொண்ட என் இந்திய தேசத்தில் நான் வாழ்ந்து கொண்டிருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கின்றேன்.

பொருளாதாரம்

தனிமனித வாணிபம் என்பதே எமது சமுதாயத்தில் பலரையும் இறக்கி வைத்து விட்டது. ஆனால் நான் காண விரும்பும் இந்தியாவின் தொழிற்சாலைகளும்⸴ தொழில் துறைகளிலும்⸴ தொழிலுக்கு கடன் கொடுக்கும் வங்கிகளும் பொதுவுடமையாக இருக்கவேண்டும்.

தனிமனித சுரண்டல் தடுக்கப்பட வேண்டும். குறைந்த வட்டி கடனாகவும்⸴ பொதுமக்களுக்கு ஏற்றதான கடனையும் அரசு வழங்க வேண்டும்.

குறைவில்லா விளைபொருட்களை விளைவிப்பவர்கள் எனது கனவு இந்தியாவில் வாழ்வர்.

கல்வி

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை” என்கின்றார் வள்ளுவர்.கல்விச்செல்வமே அனைத்துச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

என் கனவு இந்தியாவில் அரசு கல்விக்கான அனைத்து உதவிகளையும் தடையின்றி வழங்க வேண்டும். 15 வயது வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி கிடைக்க வேண்டும். திறமையின் அடிப்படையில் தொழிற்கல்வி கொடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் மாணவர்களின் நலன் முன்னேற்றத் திட்டங்கள்⸴ கல்வி முறையில் புகுத்தப்பட வேண்டிய நவீனத்துவம் போன்ற பல செயற்பாடுகள் மாணவர்களின் மூலம் அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

வறுமையற்ற இந்தியா

வறுமை என்பது உணவு இல்லாதது மட்டுமல்ல. உணவு⸴ உடை⸴ இருப்பிடம்⸴ கல்வி⸴வேலைவாய்ப்பு⸴ சிறந்த வாழ்க்கை முறை என அனைத்தையும் உள்ளடக்கியது.

மக்கள் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும். வறுமையென்ற அவல நிலை மாற வேண்டும். சுய தொழிலை ஊக்குவிக்க வேண்டும்.

அரசு வறுமையில் உள்ள மக்களுக்கு சுயதொழில் பயிற்சிகளையும்⸴ கடன் உதவிகளையும் வழங்க வேண்டும்.

முடிவுரை

நான் காண விரும்பும் இந்திய தேசத்தில் ஊழலற்ற⸴ அறிவார்ந்த அரசு உருவாக்க வேண்டும்.

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தின் விருட்சமான குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு⸴ சுகாதாரம்⸴ கல்வி கொடுப்பது தான் அறிவார்ந்த நாடு செய்யும் அற்புத முதலீடாகும்.

ஏழைகள் இல்லாத நாடாக⸴ வறுமை இல்லாத வீடுகள் நிறைந்ததாக என் இந்திய தேசம் திகழவேண்டும்.

You May Also Like:
கொடிகாத்த குமரன் பற்றிய கட்டுரை
நான் ஒரு நூலகம் கட்டுரை