மனிதர்களாகிய நாம் வாழ்வில் மேன்மை அடைய கடைப்பிடிக்க வேண்டிய உயரிய ஒழுக்கமான “அறம் செய்ய விரும்பு பேச்சு போட்டி கட்டுரை” பதிவை காணலாம்.
அறம் செய்ய விரும்பு பேச்சு போட்டி கட்டுரை
அறம் செய்ய விரும்பு என்பது ஒளவையார் வாக்காகும். அறம் எனப்படுவது யாதெனில் மனிதன் செய்கின்ற நற்செயல்கள் அனைத்தும் அறம் என்று சொல்லப்படுகிறது.
திருவள்ளுவர் அறம் பற்றி கூறுகையில் “அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என்கின்றார் அதாவது மனதிலே காணப்படுகின்ற தீய எண்ணங்கள், மற்றும் பேராசை, அவதூறு பேசுதல் போன்ற தவறான செயல்களை ஒழிப்பது தான் அறம் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
தமிழர்கள் அறத்தின் வழி வாழ்பவர்கள். அறம் செய்தல் என்பதில் பல விடயங்கள் இருக்கின்றன. பசித்தவர்களுக்கு உணவழித்தல், நேர்மையாக நடத்தல், போய் பேசாமல் உண்மை பேசுவதும் அறம் தான்,
அடுத்தவருக்கு உதவி செய்து நல்ல எண்ணங்களோடு வாழ்கின்ற உயர்ந்த வாழ்வை தான் எமது முன்னோர்கள் எமக்கு காட்டி சென்றுள்ளனர். அன்று தொட்டு இன்றுவரை இந்த உலகத்தில் அறம் செய்து வாழ்பவர்கள் பெரும் புகழோடு வாழ்கின்றனர்.
அறம் செய்ய தவறுகின்றவர்கள் வாழ்கின்ற இந்த வாழ்வே அர்த்தமற்றதாகும். அன்பில்லாதவர்கள் மிகவும் கொடிய மிருகங்களுக்கு ஒப்பானவர்கள். அன்பில்லாமல் பிற மனிதர்களையும் உயிர்களையும் துன்புறுத்தி வாழ்கின்றவர்களை இறைவன் தண்டிப்பான் என்பது நம்பிக்கை.
இதனையே திருவள்ளுவர் “என்பிலதனை வெயில் போல காயுமே அன்பிலதனை அறக்கடவுள் வருத்தும்” என்று கூறியுள்ளார்.
இதனால் தான் மனிதர்களாகிய நாம் வாழ்வில் மேன்மை அடைய அறம் என்கின்ற உயரிய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். மனிதர்களாக பிறந்த நாம் ஒவ்வொருவரும் அறத்தை பின்பற்றி வாழவேண்டும்.
நமது முன்னோர்கள் அறம் தவறி வாழ்வதனை விட உயிர் துறப்பது மேல் என்று எண்ணி வாழ்ந்தவர்கள் இதனால் தான் இன்றும் எமது தமிழ் சமூகம் ஒழுக்கம் நிறைந்த சமூகமாக விளங்குகின்றது.
அறம் செய்வதனால் உண்டாகும் மகிழ்ச்சியினை எமக்கு வேறு எதனாலும் தந்து விட முடியாது. இதனை வள்ளுவர் மிக அழகாக கூறியிருக்கின்றார் “அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல” என்கின்றார்.
அதாவது அறம் செய்வதனால் எமக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சி தான் உயர்ந்த மகிழ்ச்சி மற்றையவற்றால் கிடைக்கும் இன்பமோ புகழோ ஒரு போதும் உயர்ந்தனவாக கருதப்படமாட்டாது.
இதனால் தான் ஒளவையார் அறம் செய்ய விரும்பு என்று அழுத்தமாக கூறி சென்றிருக்கின்றார். இன்றைய காலகட்டத்தில் அறவழியில் நடப்பவர்கள் மிகவும் சொற்பமான மனிதர்களே. அறம் செய்பவர்களை ஏளனமாக பார்க்கின்ற அளவுக்கு காலம் வெகுவாக மாறிவிட்டது.
எங்கு பார்த்தாலும் அநியாயமும் அக்ரமமும் அதிகரித்துள்ளது. இந்த நிலையால் இன்று மனித வாழ்வு இடர்நிலையில் உள்ளது. மனிதாபிமானம் அற்ற மிருகங்கள் போல மனிதர்கள் வாழ்வது இழிநிலையாகும்.
இதனை விடுத்து நாம் அறம் செய்வோம் மற்றையவர்களுக்கும் அறத்தின் அவசியத்தை எடுத்துரைப்போம். அறம் செய்ய நாம் அனைவரும் முன்வர வேண்டும். இதனால் இந்த உலகில் பல நல்ல மாற்றங்கள் உருவாகும்.
You May Also Like: