இந்த பதிவில் தமிழர்களின் பாரம்பரியங்களில் ஒன்றான “ஏறுதழுவுதல் பற்றி கட்டுரை” பதிவை காணலாம்.
தமிழினத்தின் அடையாளத்தை, பண்பாட்டை உலக அளவில் எடுத்துச் சென்றதில் ஜல்லிக்கட்டும் பங்கு வகித்தது என்றால் மிகையாகாது.
ஏறுதழுவுதல் பற்றி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வரலாறு
- பெயர்க் காரணம்
- ஏறுதழுவலின் சிறப்புக்கள்
- தற்காலத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்
- முடிவுரை
முன்னுரை
தமிழர்கள் வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். தங்களது வீரத்தைப் பறைசாற்ற தமிழர்கள் பல வீர விளையாட்டுக்களில் ஈடுபடுவதுண்டு.
அந்தவகையில் ஏறுதழுவுதல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தொன்மை குடிகளான தமிழர்களின் மரபுவழி குல விளையாட்டுகளில் ஒன்றாகும்.
ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவது தான் இந்த விளையாட்டு ஆகும். இக்கட்டுரையில் ஏறுதழுவுதல் பற்றி நோக்கலாம்.
வரலாறு
ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது.
குறிப்பாக சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறுதழுவுதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது. கலித்தொகையின் முல்லைக் கலி முழுவதும் ஏறு தழுவுதலைப் பேசுகிறது.
மற்றும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
பெயர்க் காரணம்
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிப்பதாகும். இப்போதும் புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் வழக்கத்தில் உள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது.
மாட்டை அடக்கும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு பரிசளிக்கப்படும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ என்றானது.
ஏறுதழுவலின் சிறப்புக்கள்
பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு நூற்றாண்டுகளை தாண்டி நிற்கும் தமிழினத்தின் அடையாளமாக விளங்குகிறது.
தமிழினத்தின் அடையாளத்தை, பண்பாட்டை உலக அளவில் எடுத்துச் சென்றதில் ஜல்லிக்கட்டும் பங்கு வகித்தது என்றால் மிகையாகாது.
தற்காலத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்
ஏறுதழுவல் விலங்குகளை துன்புறுத்துவதாகக் கருதுவோருண்டு. தேவையற்ற உயிரிழப்பும், காயங்களும் ஏற்படுவதாகக் கருதுவோரும் உண்டு.
இவர்கள் அண்மைய ஆண்டுகளில் சல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து வருகின்றனர். குறிப்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்திய விலங்கு நல வாரியம், பெடா இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளைக் கூறலாம்.
இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960 இனை சல்லிக்கட்டு நிகழ்வுகள் மீறுகின்றன என்பது இவர்களது குற்றச்சாட்டு.
எனினும் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் சல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன.
முடிவுரை
காலமாற்றத்தில் நாம் எத்தனையோ பண்பாட்டுக் கூறுகளை பலி கொடுத்துவிட்டோம். எனினும் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் நம்மோடு தொட்டுத் தொடர்ந்து வரும் இவ்விளையாட்டு இவ்வுலகம் உள்ளவரை இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆண்மைக்கு அடையாளமாக இவ்விளையாட்டு சுட்டிக்காட்டப்படுகின்றது. அத்துடன் உலக அளவில் தமிழர்களின் அடையாளத்தைச் சுட்டிக் காட்டுவதாகவும் ஏறுதழுவுதல் காணப்படுகின்றமை பெருமைக்குரியதாகும்.
You May Also Like: |
---|
தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் |
ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை |