இந்த பதிவில் “நற்பண்புகள் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
உண்மையான அறம் எனப்படுவது தீய பழக்கங்களை ஒழித்து நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்வதே ஆகும்.
நற்பண்புகள் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நற்பண்புகள் எனப்படுபவை
- வாழ்வில் முன்னேற்றம்
- வாழ்வாங்கு வாழல்
- வெற்றிகரமான வாழ்க்கை
- முடிவுரை
முன்னுரை
“அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்” என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது வாழ்வின் உண்மையான அறம் எனப்படுவது தீய பழக்கங்களை ஒழித்து நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்வதே ஆகும்.
மனிதர்களாக பிறந்த நாம் ஒழுக்க வழியில் ஒழுகுவதன் மூலமே நமது வாழ்வில் மேன்மையடைய முடியும். இக்கட்டுரையில் நற்பண்புகள் பற்றி காணலாம்.
நற்பண்புகள் எனப்படுபவை
எமது வாழ்வில் நற்பண்புகளை நாம் எமது குழந்தை பருவத்தில் இருந்தே கற்று கொள்ள வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நற்பண்புகளை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
உண்மை பேசுதல், நேர்மையாக இருத்தல், பிறரை மதித்தல், உயிர்களிடத்தில் அன்பாக இருத்தல், இன்சொல் பேசுதல், பிறருக்கு உதவிசெய்தல், செய்நன்றி மறவாதிருத்தல் இவை போன்ற நற்பண்புகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
வாழ்வில் முன்னேற்றம்
எந்த ஒரு மனிதனும் தனது வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் ஆனால் அவனிடம் அடிப்படையாக சில நல்ல பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும்.
ஒருவன் எத்தனை திறமை வாயந்தவனாக இருந்தாலும் அவனிடத்தில் ஒழுக்கம் என்பது இல்லாவிட்டால் அவனது திறமைகள் அனைத்துமே வீணாகும்.
எமது உலகத்தில் பல வெற்றி பெற்ற மாமனிதர்களை எடுத்து பார்ப்போமானால் சுயஒழுக்கம் நிறைந்த மனிதர்களாக பலரை நாம் உதாரணமாக எடுத்து கொள்ளலாம். நாமும் வாழ்வில் முன்னேற நற்பண்புகளை கடைப்பிடிக்க வேண்டும்.
வாழ்வாங்கு வாழல்
எமது வாழ்வை நாம் அர்த்தமுள்ள வாழ்வாக வாழ வேண்டுமானால் எமக்கு நல்ல பண்புகள் இருக்க வேண்டும்.
வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களை அடைவதானாலும் சரி எம்மை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சி படுத்துவதானாலும் சரி இந்த நல்ல பண்புகள் உடையவர்களுக்கே இவை அனைத்தும் சாத்தியமானதாகும்.
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்” என்கிறார் திருவள்ளுவர். ஆக நல்வழியில் நடப்பதனால் மன திருப்தியுடன் எம்மால் இங்கே வாழ முடியும்.
வெற்றிகரமான வாழ்க்கை
வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை தீர்மானிப்பது ஒரு மனிதனிடம் இருக்கும் பணமோ அல்லது பிற செல்வங்களோ அல்ல.
அவனது உயர்ந்த குணமும் அதனால் அவன் பிற மனிதர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறான். அதன் மூலம் அவன் இந்த சமூகத்துக்கு எத்தனை நல்ல விடயங்களை செய்தான் என்பதனை பொறுத்தே வாழ்வின் வெற்றியானது தங்கியிருக்கிறது.
நல்லெண்ணங்கள் உடைய மனிதன் நிச்சயமாக வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயமாகும்.
முடிவுரை
“எண்ணம் போல் வாழ்க்கை” என்று சொல்வது போல நாமும் நல்ல உயர்ந்த எண்ணங்களை உடையவர்களாக இருப்பதனால் இந்த வாழ்வில் உயர்ந்த நிலையினை அடையலாம்.
இத்தகைய வாழ்வின் உண்மையான அர்த்தங்களை பல மனிதர்கள் புரிந்து கொள்வதேயில்லை இருப்பினும் நமது குழந்தைகளுக்கு இந்த உண்மையினை நாம் தெளிவாக எடுத்து கூறி அவர்கள் வாழ்வினை வளமாக்க உதவி செய்வோமாக.
You May Also Like: |
---|
மாணவர் ஒழுக்கம் கட்டுரை |
ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை |