நாம் வாழக்கூடிய உலகில் பல்வேறு உயிர் ஆபத்துக்களையும், உடமை சேதங்களையும் ஏற்படுத்தும் பேரிடர்கள் பலவற்றினைக் கண்டுள்ளோம்.
அந்த வகையில் இவற்றுள் ஓர் பேரிடராகவே புயலும் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு புயல் சீற்றங்கள் இடம்பெற்று இருப்பதனையும் நாம் காணலாம்.
புயல் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- புயல் என்றால் என்ன
- புயல் எச்சரிக்கை கூண்டுகள்
- புயலினால் ஏற்படும் சேதங்கள்
- புயலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
பெரும்பாலும் புயலானது கடலோரங்களை அண்டிய பிரதேசங்களிலே அதிகமாக உருவாகுவதைக் காணலாம்.
அதன் அடிப்படையில் இந்தியாவில் தமிழகத்தை பொறுத்தவரை 13 கடலோர பிரதேசங்கள் மிகவும் அதிகமாக புயலினால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
அந்த வகையில் வரதா புயல், நிஷா புயல், ராமேஸ்வரம் புயல், நீலம் புயல் போன்றவற்றை நாம் நோக்க முடியும். இக்கட்டுரையில் புயல் பற்றி நோக்கலாம்.
புயல் என்றால் என்ன
புயல் என்றால் என்ன என்பதனை நோக்கும் போது, கடற்பரப்பில் 26° செல்சியஸ்க்கு அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும் போது, காற்று வேகமாக வெப்பமடைந்து மேல்நோக்கிச் செல்கிறது.
அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது. மேலே செல்லும் வெப்பக் காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்குகிறது.
இதன்காரணமாக தாழ்வுநிலை உண்டாகி அதனால் அங்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்கும் நிலையே காற்றழுத்த தாழ்வு நிலையாகும். பூமியின் சுழற்சி காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரிக்கும் நிலையே புயல் எனப்படுகின்றது.
புயல் எச்சரிக்கை கூண்டுகள்
குறிப்பாக கடலோர மக்களை புயல் தொடர்பாக எச்சரிக்கும் வகையிலேயே இந்த புயல் எச்சரிக்கை கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதாவது கடலில் இருந்து பார்ப்பதற்கு ஏதுவான துறைமுகங்களில் உயர்ந்த கம்பங்களில் விளக்குகளை வைத்திருப்பர்.
குறிப்பாக இரவு நேரங்களில் புயல் தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கின்ற போது சிவப்பு, வெள்ளை விளக்குகள் எரிய வைக்கப்படுவதனையும் காணலாம். இவ்வாறாக கடலோர பிரதேசங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை காணலாம்.
புயலினால் ஏற்படும் சேதங்கள்
தற்காலங்களைப் பொறுத்தவரையில் மிகவும் அதிகமான புயல் பேரிடர்கள் இடம்பெற்று இருப்பதனை காணலாம்.
இதனால் கடலோரங்களை அண்டிய பிரதேசத்தில் வாழக்கூடிய மீனவர்களின் உயிர், உடமை அதிகமாக பறிக்கப்பட்டுள்ளன.
அதாவது கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடிய மீனவர்களின் உயிர் மற்றும் கரையோர பிரதேசங்களில் காணப்படக்கூடிய படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் போன்ற அனைத்தும் புயலில் சிக்குண்டு பறிபோவதனை காண முடியும்.
ஆகவே புயலினால் ஏனைய பிராந்தியங்களில் வாழக்கூடிய மக்களை விட கடலோரப் பகுதிகளில் வாழக்கூடிய மக்களே அதிகமாக பாதிப்படைகின்றனர் என கூறலாம்.
புயலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிமுறைகள்
வானிலை எச்சரிக்கை மையம், புயல் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் தென்படுமாயின் அவற்றினை கடலோரப் பிரதேசங்களில் வாழக்கூடிய மக்களுக்கு முன்னறிவிப்பு செய்வர்.
எனவே கடலோர பிரதேசங்களில் வாழக்கூடிய மக்கள் முன்னயத்தங்களோடு செயல்படுதல் வேண்டும்.
புயல் எச்சரிக்கை விடப்பட்டால் கடலோரங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்தல், புயல் நேரங்களில் மின்சார பொருட்களை உபயோகத்தை நிறுத்தல், புயல் முற்றாக முடிந்தது என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரையில் மீன்பிடிக்கோ, வேறு ஏதும் தேவைகளுக்கோ வெளியில் செல்லாமல் இருத்தல் போன்ற செயற்பாடுகளை செய்வதன் மூலமாக புயலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
முடிவுரை
இயற்கை எவ்வளவு அழகானதோ, அதேபோல் இயற்கையின் சீற்றமும் மிகவும் ஆபத்தானது. ஆகவே இயற்கையின் சீற்றமாகிய புயல் ஆபத்தான ஒரு பேரிடர் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
புயல் ஏற்படுவதற்கான உறுதியான அறிவிப்புக்கள் கிடைக்குமானால், அச்சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான முறையில் செயல்படுவது நம் அனைவரதும் கடமையாகும். ஆகவே புயல் தொடர்பான விழிப்புணர்வுகளை பெற்றுக் கொள்வதும் அவசியமானதாகும்.
You May Also Like: